1:
ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, "என் மகனே" என்றார்; ஏசா, "இதோ வந்துவிட்டேன்" என்றான்.
2:
அவர் அவனை நோக்கி, "இதோ பார்; எனக்கு வயதாகிவிட்டது. சாவு எந்நாள் வருமோ என்றறியேன்.
3:
இப்பொழுது உன் கருவிகளான வில்லையும் அம்புக்கூட்டையும் எடுத்துக்கொள். காட்டுக்குப் போ. வேட்டையாடி, எனக்கு வேட்டைக்கறி கொண்டு வா.
4:
நான் விரும்பும் முறையில் சுவையான உணவு வகைகளைச் சமைத்து என்னிடம் கொண்டு வா. நான் அவற்றை உண்பேன். நான் சாகுமுன், உனக்கு மனமார ஆசி வழங்குவேன்" என்றார்.
5:
ஈசாக்கு தன் மகன் ஏசாவிடம் பேசியதை ரெபேக்க கேட்டுக்கொண்டிருந்தார். வேட்டையாடி வேட்டைக்கறி கொண்டுவருமாறு ஏசா காட்டிற்குப் புறப்பட்டவுன்,
6:
அவர் தம் மகன் யாக்கோபை நோக்கி, "உன் தந்தை உன் சகோதரன் ஏசாவுக்குச் சொன்னது என் காதில் விழுந்தது. அவர் சொன்னது;
7:
நீ போய் வேட்டையாடி, வேட்டைக்கறியை சமைத்துக் கொண்டு வா. நான் உண்பேன். நான் சாவதற்கு முன் ஆண்டவர் திருமுன் உனக்கு ஆசி வழங்குவேன்."
8:
இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.
9:
உடனே மந்தைக்குப் போ, அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா. நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.
10:
நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்" என்றார்.
11:
யாக்கோபு தன் தாய் ரெபேக்காவிடம், "என் சகோதரன் ஏசா உடலில் அடர்ந்த உரோமம் உடையவன்; நானோ மிருதுவான உடல் கொண்டவன்.
12:
என் தந்தை என்னைத் தடவிப் பார்த்தால் என்ன ஆவது? அவரை நான் ஏமாற்றுவதாகத் தெரிந்துவிட்டால், என்மேல் ஆசிக்குப் பதிலாக சாபத்தையல்லவா விழச் செய்துகொள்வேன்" என்றான்.
13:
ஆனால் அவன் தாய் அவனிடம், "மகனே! உனக்குரிய சாபம் என்மேல் விழட்டும்; நான் சொல்வதை மட்டும் செய்; போ; அவற்றை என்னிடம் கொண்டு வா" என்றார்.
14:
அவனும் அவ்வாறே போய் அவற்றைப் பிடித்துத் தன் தாயிடம் கொண்டு வந்து கொடுக்க, அவர் அவன் தந்தைக்கு விருப்பமான சுவையுள்ள உணவு வகைகளைத் தயாரித்தார்.
15:
மேலும் ரெபேக்கா தம்முடன் வீட்டில் வைத்திருந்த தம் மூத்த மகன் ஏசாவின் உடைகளில் சிறந்தவற்றைத் தம் இளைய மகன் யாக்கோபுக்கு உடுத்துவித்தார்.
16:
அவன் கைகளையும் மிருதுவான கழுத்தையும் வெள்ளாட்டுக் குட்டிகளின் தோலால் மூடினார்.
17:
அவர் சுவையான உணவு வகைகளையும், தாம் சுட்ட அப்பங்களையும் தம் மகன் யாக்கோபின் கையில் கொடுத்தார்.
18:
அவனும் அவற்றைத் தன் தந்தையிடம் எடுத்துச்சென்று, "அப்பா" என்று அழைத்தான். அவரும் மறுமொழியாக, "ஆம் மகனே, நீ எந்த மகன்?" என்று கேட்க,
19:
யாக்கோபு தன் தந்தையிடம், "நான்தான் உங்கள் தலைப்பேறான ஏசா. நீங்கள் சொன்னவாறு செய்திருக்கிறேன். எழுந்து உட்கார்ந்து என் வேட்டைப் பதார்த்தங்களை உண்டு மனமாற எனக்கு ஆசி வழங்குங்கள்" என்றான்.
20:
"மகனே! இது உனக்கு இவ்வளவு விரைவில் எப்படி அகப்பட்டது?" என்று கேட்க, அவன், "உம் கடவுளாகிய ஆண்டவரால்தான் எனக்கு இது நிகழ்ந்தது, "என்றான்.
21:
"மகனே, அருகில் வா, நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா என்று நான் உன்னைத் தடவிப்பார்த்துத் தெரிந்துகொள்வேன்" என்றார்.
22:
யாக்கோபு தன் தந்தை அருகில் வந்தான். "குரல் யாக்கோபின் குரல்; ஆனால் கைகளோ ஏசாவின் கைகள்" என்றார்.
23:
அவன் கைகள் அவன் சகோதரன் ஏசாவின் கைகளைப்போல் உரோமம் அடர்ந்தவையாய் இருந்ததால், அவனை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. எனவே அவனுக்கு ஆசி வழங்கினார்.
24:
மீண்டும் அவர் "நீ உண்மையிலேயே என் மகன் ஏசாதானா?" என்று வினவ, அவனும் "ஆம்" என்றான்.
25:
அப்பொழுது அவர், "மகனே உண்பதற்கு வேட்டைப்பதார்த்தங்களைக் கொண்டு வா. மனமார நான் உனக்கு ஆசி வழங்குவேன்" என்றார். அவ்வாறே யாக்கோபு கொண்டுவர, அவர் அதை உண்டார். பின், அவன் திராட்சை ரசம் கொண்டுவர, அவர் அதைக் குடித்தார்.
26:
அப்பொழுது அவன் தந்தை அருகில் வந்து என்னை முத்தமிடு" என்றார்.
27:
அவனும் அருகில் போய் அவரை முத்தமிட, என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்!
28:
வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக!
29:
நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக! மக்கள் உனக்குப் பணிந்திடுக! உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிவிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க!"
30:
இவ்வாறு யாக்கோபு தந்தையின் முன்னிலையிலிருந்து விரைந்து வெளியேற, அவன் சகோதரன் ஏசா வேட்டைக்கறியுடன் வந்தான்.
31:
அவனும் சுவையான உணவுவகைகளைச் சமைத்துத் தன் தந்தையிடம் கொண்டுவந்து அவரை நோக்கி, "என் தந்தை எழுந்து தம் மகன் கொண்டு வந்திருக்கும் வேட்டைக்கறியை உண்டு, மனமார எனக்கு ஆசி வழங்குவாராக" என்றான்.
32:
அவன் தந்தை ஈசாக்கு அவனை நோக்கி, நீ யார் என, அவன்; "நான் தான் உங்கள் தலைப்பேறான மகன் ஏசா" என்றான்.
33:
"அப்படியானால் வேட்டையாடி எனக்குக் கொண்டு வந்தவன் எவன்? நீ வருமுன் அந்த உணவை நான் உண்டு அவனுக்கு ஆசி வழங்கி விட்டேன். அவனே ஆசி பெற்றவனாய் இருப்பான்" என்றார்.
34:
ஏசா தந்தையின் வார்த்தைகளைக் கேட்டு, மிகவும் மனக்கசப்படைந்து பெருங்குரலெழுப்பிக் கதறி அழுதான். அவன் தன் தந்தையை நோக்கி, "அப்பா! எனக்கும் ஆசி வழங்குவீர்" என்றான்.
35:
அதற்கு அவர்; "உன் தம்பி கபடமாய் வந்து உனக்குரிய ஆசியைப் பெற்றுச் சென்றுவிட்டான்" என்றார்.
36:
அதைக் கேட்ட ஏசா, "யாக்கோபு என்னும் பெயர் அவனுக்குப் பொருத்தமே. ஏனெனில், அவன் இருமுறை என்னை ஏமாற்றிவிட்டான். ஏற்கெனவே எனக்குரிய தலைமகனுரிமையைப் பறித்துக் கொண்டான். இப்பொழுது எனக்குரிய ஆசியையும் பிடுங்கிக்கொண்டான்" என்று சொல்லி, திரும்பவும் தந்தையை நோக்கி; "நீர் எனக்கென வேறு எந்த ஆசியும் ஒதுக்கி வைக்கவில்லையா?" என்று கேட்டான்.
37:
"நான் அவனை உனக்குத் தலைவனாக ஏற்படுத்தியுள்ளேன். அவன் உறவினர் யாவரையும் அவனுக்கு அடிமைப்படுத்தியுள்ளேன். அவனுக்குத் தானியத்தையும் திராட்சை இரசத்தையும் நிறைவாக வழங்கிவிட்டேன். இப்படி இருக்க என் மகனே! நான் உனக்கு வேறென்ன செய்ய முடியும்?" என்று சொல்ல,
38:
ஏசா அவரை நோக்கி, "அப்பா, உம்மிடம் ஒரே ஆசிதான் இருந்ததா? எனக்கும் ஆசி வழங்க வேண்டும் அப்பா" என்று சொல்லிக் கூக்குரலிட்டு அழுதான்.
39:
அவன் தந்தை ஈசாக்கு அவனுக்கு மறுமொழியாக "உன் குடியிருப்புக்கு நிலத்தின் செழுமையோ மேல்வானின் பனித்துளியோ கிட்டாது.
40:
நீ உன் வாளினால் வாழ்க்கை நடத்தி உன் தம்பிக்கு அடிமையாய் இருப்பாய்; நீ கிளர்ந்து எழும்போது உன் கழுத்தில் அவன் சுமத்திய நுகத்தடியை முறித்து விடுவாய்" என்றார்.
41:
தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு, "என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன. அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன்" என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
42:
தம்மூத்த மகன் ஏசாவின் திட்டம் பற்றி ரெபேக்கா கேள்விப்பட்டதும் அவர் ஆளனுப்பித் தம் இளைய மகன் யாக்கோபை அழைத்து, "இதோ! உன் சகோதரன் ஏசா உன்னைக் கொலை செய்து, தன்னைத் தேற்றிக்கொள்ள விரும்புகிறான்.
43:
ஆகையால், மகனே நான் சொல்வதைக் கேள். உடனே கிளம்பி காரானில் உள்ள என் சகோதரன் லாபானிடம் ஓடிப்போய்,
44:
உன் சகோதரன் சீற்றம் தணியும்வரை சிலநாள் அவரிடம் தங்கி இரு.
45:
தனக்கு விரோதமாய் நீ செய்ததை அவன் மறந்து கோபம் தீர்ந்த பின் நான் உனக்குச் சொல்லியனுப்பி, உன்னை அங்கிருந்து இவ்விடத்திற்கு அழைத்துக் கொள்வேன். ஒரே நாளில் என் இரு புதல்வர்களையும் நான் ஏன் இழந்து போக வேண்டும்?" என்றார்.
46:
பின் ரெபேக்கா ஈசாக்கை நோக்கி "இத்தியப் பெண்களை முன்னிட்டு என் வாழ்கை எனக்குச் சலித்துப் போயிற்று. யாக்கோபும் இவர்களைப் போன்ற இந்நாட்டுப் பெண்களினின்றும் ஒருத்தியை மணந்து கொண்டால் என் வாழ்கை என்ன ஆவது" என்றார்.