தொடக்கநூல் - Chapter 17

1: ஆபிராமுக்கு வயது தொண்ணூற்றொன்பதாக இருந்தபொழுது, ஆண்டவர் அவருக்குத் தோன்றி, "நான் எல்லாம் வல்ல இறைவன். எனக்குப் பணிந்து நடந்து, மாசற்றவனாய் இரு.
2: உனக்கும் எனக்குமிடையே ஓர் உடன்படிக்கையை நான் ஏற்படுத்திக்கொள்வேன்; உன்னை மிகமிகப் பெருகச் செய்வேன்" என்றார்.
3: அப்பொழுது ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது;
4: "உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே; எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
5: இனி உன்பெயர் ஆபிராம் அன்று; "ஆபிரகாம்" என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன்.
6: மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்.
7: தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன்.
8: நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழி மரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்" என்றார்.
9: மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், "நீயும் தலைமுறைதோறும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
10: நீங்கள் கடைப்பிடிக்குமாறு உன்னோடும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினரோடும் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும்.
11: உங்கள் உடலில் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும். இதுவே உங்களுக்கும் எனக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம்.
12: தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்ய வேண்டும். அக்குழந்தை வீட்டில் பிறந்திருந்தாலும், உன் வழிமரபைச் சாராமல் வேற்றினத்தாரிடமிருந்து விலைக்கு வாங்கப்பட்டிருந்தாலும், அப்படியே செய்ய வேண்டும்.
13: உன்வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.
14: தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்" என்றார்.
15: பின்பு கடவுள் ஆபிரகாமிடம், "உன் மனைவியைச் "சாராய்" என அழைக்காதே. இனிச் "சாரா" என்பதே அவள் பெயர்.
16: அவளுக்கு ஆசி வழங்குவேன். அவள் வழியாக உனக்கு ஒரு மகனையும் தருவேன். அவளுக்கு நான் ஆசி வழங்க, அவள் வழியாக நாடுகள் தோன்றும். மக்களினங்களுக்கு அரசர்களும் அவளிடமிருந்து உதிப்பர்" "என்றார்.
17: ஆபிரகாம் தாள்பணிந்து வணங்கி, நகைத்து, "நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்? தொண்ணூறு வயது சாராவா குழந்தை பெறப் போகிறாள்?" என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
18: ஆபிரகாம் கடவுளிடம், "உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்" என்றார்.
19: கடவுள் அவரிடம்;, "அப்படியன்று. உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள். அவனுக்கு நீ "ஈசாக்கு" எனப் பெயரிடுவாய். அவனுடனும் அவனுக்குப்பின் வரும் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன்.
20: இஸ்;மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன். அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன். பன்னிரு இளவரசர்களுக்கு அவன் தந்தையாவான்; அவனிடம் இருந்து ஒரு பெரிய நாடு தோன்றும்.
21: ஆனால், சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கை நிலைநாட்டுவேன் என்றார்.
22: அவருடன் பேசி முடித்தபின், கடவுள் ஆபிரகாமை விட்டுச் சென்றார்.
23: பின் ஆபிரகாம் தம் மகன் இஸ்மயேலுக்கும் தம் வீட்டில் பிறந்த எல்லாருக்கும், தாம் விலைக்கு வாங்கிய எல்லாருக்கும், அதாவது, தம் வீட்டில் இருந்த ஒவ்வொரு ஆணுக்கும், கடவுள் தமக்குக் கூறியபடியே அதே நாளில் அவர்கள் உடலில் விருத்தசேதனம் செய்தார்.
24: ஆபிரகாமுக்கு அவர் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது அவருக்கு வயது தொண்ணூற்றொன்பது.
25: அவர் மகன் இஸ்மயேலுக்கு அவன் உடலில் விருத்தசேதனம் செய்யப்பட்டபொழுது, அவனுக்கு வயது பதின்மூன்று.
26: ஆபிரகாமுக்கும் அவர் மகன் இஸ்மயேலுக்கும் ஒரே நாளில் விருத்தசேதனம் செய்யப்பட்டது.
27: அவருக்குச் செய்யப்பட்டதுபோல அவர் வீட்டில் பிறந்தவர்கள், வேற்றினத்தாரிடமிருந்து அவர் விலைக்கு வாங்கியவர்கள் ஆகிய எல்லா ஆண்களுக்கும் விருத்தசேதனம் செய்யப்பட்டது.

தொடக்கநூல் - Chapter 17