1:
அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும் கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது,
2:
அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராகப் போர் தொடுத்தனர்.
3:
அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.
4:
பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்.
5:
ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்தரோத்து கர்னயிமிலிருந்த இரபாயியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும்
6:
சேயிர் மலைப்பகுதியில் இருந்த ஓரியரையும் பாலை நிலத்தின் எல்லையில் இருந்த ஏல்பாரான்வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.
7:
அவர்கள் திரும்பும் வழியில் காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.
8:
அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று,
9:
ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும்-ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்.
10:
இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர்.
11:
வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவுப் பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர்.
12:
அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களையும் கவர்ந்து கொண்டு சென்றனர்.
13:
தப்பிவந்த ஒருவன் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். அப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்து வந்தார். அவர்கள் ஆபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள்.
14:
தம் உறவினர் கைதியாகக் கொண்டு செல்லப்பட்டார் என்பதைக் கேள்வியுற்றதும், ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முந்நூற்றுப் பதினெட்டுப் பேரைத் திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.
15:
அவரும் அவர் ஆள்களும் அணிஅணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத் தாக்கித் தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
16:
அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்.
17:
ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது "அரசர் பள்ளத்தாக்கு" என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான்.
18:
அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் "உன்னத கடவுளின்" அர்ச்சகராக இருந்தார்.
19:
அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக!
20:
உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!" என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
21:
சோதோம் அரசன் ஆபிராமிடம், "ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக் கொள்ளும்" என்றான்.
22:
அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், "விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்;
23:
"நான்தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்" என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக் கொள்ளமாட்டேன்.
24:
இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்" என்றார்.